இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் போட்டியில் மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்தப் போட்டியில் விராட் கோலியின் விகெட்டை வீழ்த்தியவரும், இதுவரை 6 முறை விராட் விக்கெட்டை கைப்பற்றியவருமான ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா செய்தியாளர்களிடம் பேசினார். அதில், '' பேட்டிங்கின் தொடக்கத்தில் லெக் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் விராட் கோலி திணறுகிறார். அவருக்கு எதிராக பந்துவீசுகையில் சரியான திட்டம் இருக்க வேண்டும். கடந்த ஆண்டில் நான்கு முறை அவரது விக்கெட்டைக் கைப்பற்றினேன். கடந்தப் போட்டியிலும் வீழ்த்தினேன். அதனால் அவருக்கு எதிராக விளையாடும்போது எனது மன உறுதி அதிகரித்துள்ளது.
விராட் போன்ற வீரர்களுக்கு பந்துவீசும் போது மனதளவில் அட்டாக்கிங் நிலையிலேயே செயல்படவேண்டும். இல்லையென்றால் அவரை விக்கெட் வீழ்த்துவது இயலாத விஷயமாகும். நான் அவரது விக்கெட்டை 6 முறை வீழ்த்தியுள்ளேன். ஆனாலும் அவர் எனக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட் 100-க்கும் அதிகமாக வைத்துள்ளார்'' என்றார்.
தொடர்ந்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் முதல் போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி, ஸாம்பா பந்துவீச்சிற்கு உரிய மரியாதை வழங்க மறுக்கிறார் எனக் கூறியிருந்தார். இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு, ''நான் அதனை ஏற்கவில்லை. அவர் எனது பந்துவீச்சுக்கு மரியாதை கொடுக்கவில்லை என என்னால் கருத முடியாது. ரஷீத் கான், குல்தீப் யாதவ் போல் அதிக திறமையான வீரர் நான் இல்லை. ஆனால், நான் எனது திறன்களை வளர்த்து வருகிறேன். இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தொடர்ந்து இரண்டு முறையாக வீழ்த்துவது எளிதானதல்ல'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பயிற்சியில் களமிறங்கிய தோனி!