நடப்பு சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், குரூப் ஏ, பி பிரிவில் இடம்பெற்ற தமிழ்நாடு - மும்பை அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 488 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, கேப்டன் ஆதித்யா தாரே 154 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் சாய் கிஷோர் நான்கு, அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய தமிழ்நாடு அணி 88.4 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்களை எடுத்து ரன்குவிப்பில் தடுமாறியது. இந்த இக்கட்டான நிலையில் எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின் - சாய் கிஷோர் தங்களது பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
50 ஓவர்களுக்கு மேல் தாக்குப்படித்த இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்த நிலையில், அஸ்வின் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில், ஐந்து பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் அடங்கும்.
அதன்பின், 192 பந்துகளை எதிர்கொண்ட சாய் கிஷோர் மூன்று பவுண்டரி உட்பட 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், தமிழ்நாடு அணி 156.4 ஓவர்களில் 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மும்பை அணி தரப்பில் ஷாம்ஸ் முலானி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 164 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய தமிழ்நாடு அணி ஆட்டத்தின் கடைசி நாளான நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 22 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. இதனால் இப்போட்டி டிராவில் முடிந்தது. இருப்பினும் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் மும்பை அணிக்கு மூன்று புள்ளிகளும், தமிழ்நாடு அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.
இப்போட்டியின் மூலம், ஐந்து போட்டிகள் விளையாடிய தமிழ்நாடு அணி இரண்டு டிரா, மூன்று தோல்வி என ஐந்து புள்ளிகளுடன் 17ஆவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், மும்பை அணி நான்கு ஆட்டங்களில் ஒரு வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வி என ஒன்பது புள்ளிகளுடன் 13 இடத்தில் உள்ளது.