சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரின் போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 600ஆவது விக்கெட்டை கைப்பற்றி சாதனைப்படைத்தார். இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் அடங்கியத் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுமென பிசிசிஐ அறிவித்தது.
இது குறித்து பேசிய ஆண்டர்சன், ‘ஒரு வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களுடைய விக்கெட்டுகளை வீழ்த்துவதை விரும்புகிறேன். அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பதற்கு நான் ஆயத்தமாகவுள்ளேன்.
ஏனெனில், கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஒருசில முறை கோலியின் விக்கெட்டை நான் கைப்பற்றினேன். ஆனால் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவரின் பேட்டிங் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. மேலும் அத்தொடரில் அவர் இரண்டு சதங்களுடன் 593 ரன்களையும் எடுத்திருந்தார்.
அதனால், தற்போது அவரது விக்கெட்டை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. அதனால் இந்த தொடரானது நிச்சயம் கடினமான ஒன்றாக அமையும். அதேசமயம் இந்தியாவிலுள்ள மைதானங்களில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று’ எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'மீண்டும் அணியில் இடம்பெற்றது எனக்கு கிடைத்த வெகுமதி' - மார்க்கஸ் ஸ்டோனிஸ்!