ராகுல், பந்த் சிறந்தவர்கள்..ஆனால் தோனிபோல ஆக முடியாது: குல்தீப் - நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பிரபல தனியார் செய்தித்தாளின் விருது வழங்கும் விழாவில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியைப் பற்றி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடர் முதல், தற்போது வரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக இருந்துவருவது, தோனி எப்போது இந்திய அணியில் மீண்டும் விளையாடுவார் என்பது தான். அந்த வகையில் பிரபல தனியார் பத்திரிகை விருது வழங்கும் விழாவில், இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் தோனியைப் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தோனி குறித்து அவர் கூறியதாவது, மாஹி பாய் மிகவும் சிறந்த அனுபவசாலி. அவர் இந்திய அணிக்காக பல முறை தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை இழந்தபோது அவரின் அனுபவத்தை இந்திய அணி நினைவு கூர்ந்துள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ராகுல், பந்த் இருவரும் திறமையான வீரர்களே. பந்த் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை முற்றிலுமாக தவறவிட்டுவிட்டார். ஆனால் ராகுல் தனது பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் அசத்தியாதால் அவருக்கான வாய்ப்பை தற்போது வரை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் எந்த வரிசையில் இறங்கினாலும் தனது பேட்டிங்கில் இந்திய அணிக்கு பலம் சேர்க்க முடிகிறது. இருப்பினும் ஒருபோதும் அவர்கள் தோனியைப் போல் மாறிவிட இயலாது என்பதை மனதில் வைத்திருக்க வேண்டுமென தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியன் ஓபன் 2020: முதல் போட்டியிலேயே முன்னணி வீரர்களுடன் மோதும் சாய்னா, சிந்து!