நடப்பு ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் முதல்முறையாக அந்நாட்டில் நடைபெற்றுவந்தது. கடந்த 18ஆம் தேதி இதன் அரையிறுதிப் போட்டி நடைபெறவிருந்த நிலையில், கோவிட்-19 வைரஸால் இந்த தொடர் ரத்து செய்யப்பட்டது.
இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்தவுடன் கோவிட்-19 வைரஸ் பீதியால் இதில், பங்கேற்ற இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தாயகம் திரும்பினர். அவருக்கு கோவிட்-19 வைரஸ் அறிகுறி இருப்பதால்தான் இந்தத் தொடர் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்ற அனைத்து வீரர்கள், அணி உரிமையாளர்கள், நடுவர்கள் உள்ளிட்ட 128 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. அதன் முடிவு இன்று வெளியான நிலையில், பரிசோதனை செய்யப்பட்ட 128 பேருக்கும் கோவிட்-19 பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்த இக்கட்டான சூழ்நிலையில், வெளியான இந்த முடிவு நிம்மதியடையச் செய்கிறது. தொடரில் பங்கேற்ற வீரர்கள், அணி உதவியாளர்கள் அனைவரும் எந்தவித உடல்நலக் கோளாறு இல்லாமல் தங்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சியாகவுள்ளது" என்றார். மேலும், தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள், அணி உதவியாளர்கள் உள்ளிட்ட 25 பேரும் தங்களது நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: டி காக்குடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறேன்' - டேல் ஸ்டெயின்