பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான பாபர் அசாம், தனது சிறப்பான பேட்டிங்கினால் வளர்ந்து வரும் சிறந்த பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார். இந்நிலையில், இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது.
10 வருடங்களுக்குப் பிறகு இவ்விரு அணிகள் கராச்சி மைதானத்தில் மோதியதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பன்மடங்கு அதிகரித்தது. இதையடுத்து, இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய பாபர் அசாம், ஒருநாள் போட்டியில் தனது 11ஆவது சதத்தை பூர்த்தி செய்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 105 பந்துகளில் எட்டு பவுண்டரி, நான்கு சிக்சர் என 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
முதல் பாக். வீரர்:
நடப்பு ஆண்டில் அவர், ஒருநாள் போட்டியில் இதுவரை மூன்று சதம், ஏழு அரைசதம் என 1061 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம், ஒரு ஆண்டில் குறைந்த ஒருநாள் போட்டிகளில் (19) ஆயிரம் ரன்கள் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதனால், பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாவித் மியான்தாத்தின் சாதனை (21) முறியடிக்கப்பட்டது.
கோலியை விட்டுவைக்காத பாபர் அசாம்:
அதுமட்டுமில்லாமல், ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் 11 சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் கோலியின் சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.கோலி 11 சதம் அடிக்க 82 இன்னிங்ஸ் தேவைப்பட்ட நிலையில், பாபர் அசாம் 71 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துகொண்டார்.
கோலியை போலவே தான் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என பாபர் அசாம் பலமுறை கூறியுள்ளார். அதன்படி, தனது நிலையான ஆட்டத்திறனை தொடர்ந்து வெளிப்படுத்தினால் நிச்சயம் கோலியைப் போல இவரும் வரும் காலங்களில் வலம்வருவார் எனத் தெரிகிறது.
மூன்றாவது இடத்தில் பாபர் அசாம்:
இந்த சதத்தின்மூலம், ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் 11 சதம் அடித்தவர்களின் வரிசையில் பாபர் அசாம் மூன்றாவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில், தென் ஆப்பிரி்க்காவின் முன்னாள் வீரர் ஹசிம் ஆம்லா (64) முதலிடத்திலும், மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் (65) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம், 11 சதம், 15 அரை சதம் என 54.55 பேட்டிங் ஆவரேஜூடன் 3328 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.