அகமதாபாத்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று (மார்ச் 20) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, விராத் கோலி இணை களமிறங்கியது. இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா அணியின் ஸ்கோர் வேகமாக உயர, ரோஹித் 64, சூர்யகுமார் 32 ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஹர்திக், கோலி அசத்தலாக ஆடி இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. இதன்மூலம் இந்தியா 224 ரன்கள் குவித்தது.
பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராய், புவனேஷ்வரின் இரண்டாம் பந்திலேயே வெளியேறினார். அதன்பின் வந்த மாலனும், பட்லரும் அணியின் ஸ்கோரை அதிவேகமாக உயர்த்தினர். மாலன் 33 பந்திலும், பட்லர் 30 பந்திலும் அரைசதத்தை கடந்தனர்.
பட்லர் 52 ரன்களில் புவனேஷ்வர் பந்தில் பெவிலியன் திரும்பினார். 15ஆவது ஓவரை வீசிய தாக்கூர் அடுத்தடுத்து மாலன், மார்கன் விக்கெட் எடுக்க ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.
இறுதி ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீச இந்தியா அணி இப்போட்டியில் வென்று தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய தரப்பில் தாக்கூர் 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, சொந்த மண்ணில் மீண்டும் தொடரை வென்றுள்ளது.