கரோனா வைரஸ் பரவல் காரணமாக நீண்ட நாள்களாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடர் ஜூலை மாதம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முதல் ஒருநாள் தொடராக இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதிய மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.
இதன் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதில் தொடக்கத்திலேயே 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்த அயர்லாந்து அணியை, குர்டிஸ் கேம்பர் நிதானமாக ஆடி நிலை நிறுத்தினார். இறுதியாக அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குர்டிஸ் 68 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பெயர்ஸ்டோவ் 21 பந்துகளில் அரைசதம் விளாசி, கேப்டன் இயான் மோர்கன் சாதனையை சமன் செய்தார். இவர் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அணியின் ஸ்கோர் 131 என்ற நிலையில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து கேப்டன் மோர்கன், மொயின் அலி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணி 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
பின்னர் இணைந்த சாம் பில்லிங்ஸ் - டேவிட் வில்லி இணை, அதிரடியாக ஆடி 32.3 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இறுதிவரை ஆடிய பில்லிங்ஸ் 46 ரன்களும், வில்லி 47 ரன்கள் எடுத்தனர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதால், தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஐபிஎல் பேட்ஸ்மேன்களுக்கானது; பிஎஸ்எல் பவுலர்களுக்கானது' - சைனாப் அப்பாஸ்