டெல்லி: அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள டி 20 உலகக்கோப்பை உள்பட இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும், கிரிக்கெட் தொடர்கள் குறித்து விவாதிக்க பிசிசிஐ மே 29ஆம் தேதி சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ செயலர் ஜெய் ஷா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இந்த இக்கட்டான பெருந்தொற்றுக் காலத்தில், இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் கிரிக்கெட் தொடர்கள் குறித்து விவாதிப்பதற்கு இக்கூட்டம் நடத்தப்படவிருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
கரோனா தொற்று நாடுமுழுவதும் வேகமாகப் பரவிவரும் சூழலில், இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெறுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பை தொடரின் நிர்வாகக் குழு கூட்டத்தில், தொடரை எங்கு நடத்துவது என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக பிசிசிஐ இந்த சிறப்பு பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
14ஆவது ஐபிஎல் தொடரும் பாதிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால், டி20 உலககோப்பை இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர், முதல்தர போட்டிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’நான் வலுப்பெற்று வருகிறேன்’ - காயத்திலிருந்து மீளும் நடராஜன்!