பல்லேகலே: 16வது ஆசிய கோப்பை ஒருநாள் தொடரின் 5வது லீக் ஆட்டம் இன்று (செப்.04) இந்தியா - நேபாளம் இடையே, இலங்கை பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டி முடிவில்லாத போட்டியாக அறிவிக்கப்பட்டி இருந்தது, அதேபோல் நேபாளம் அணி அதன் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதி தோல்வி அடைந்து இருந்தது. இதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் பேட் செய்த நேபாள அணியின் தொடக்க வீரர்களாக ஆசிப் ஷேக் மற்றும் குஷால் புர்டெல் களம் இறங்கினர்.
ஆட்டத்தின் துவக்கத்திலேயே தொடக்க வீரர்களான ஆசிப் ஷேக் மற்றும் குஷால் புர்டெலில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் கோட்டை விட்டனர். அதன் பின் சுதாரித்து கொண்ட இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். 9.5 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணியின் ஸ்கோர் 65 ரன்களை எட்டிய போது குஷால் புர்டெல், விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து களம் வந்த பீம் ஷர்கி 7, கேப்டன் ரோஹித் பவுடல் 5, குஷால் மல்லா 2 ரன்கள் மட்டுமே எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னர் கைகோர்த்த குல்சன் ஜா - ஆசிப் ஷேக் ஜோடி நிதானமாக விளையாடினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ஆசிப் ஷேக் தனது 10வது அரைசதத்தை பதிவு செய்தார். பின்னர் குல்சன் ஜா 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களும், திபேந்திர சிங் ஐரி 29 ரன்களுடனும் அவுட் ஆகினர்.
அதன் பின் வந்த சோம்பால் கமி 2 சிக்ஸர்கள், 1 பவுட்ண்ட்ரி என 48 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் 48.2 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்களை சாய்த்தனர். ஷமி, ஹர்திக் பாண்டியா, தாக்கூர் ஆகியோர் அவர்களது பங்கிற்கு தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: BAN Vs AFG: மெஹிதி ஹசன், நஜ்முல் ஹொசைன் சதம்.. வங்கதேசம் அபார வெற்றி!