லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் வென்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்று தொடரை தக்க வைத்து 2-1 என்ற புள்ளியில் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த தொடரின் நான்காவது போட்டி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மான்செஸ்டரில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய கவாஜா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து போட்டியின் ஆரம்பத்திலேயே தனது அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன் பின் இறங்கிய லபுசன் வார்னருடன் சேர்ந்து ரன்கள் சேர்த்த நிலையில், வார்னர் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதையும் படிங்க: Wimbledon: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி வரலாறு படைத்த அல்காரஸ்!
அடுத்து களம் கண்ட ஸ்மித் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து லபுசன் அரை சதம் அடித்த நிலையில் மொயின் அலி சுழல் பந்துவீச்சில் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஹெட் 7 பவுண்டரிகளுடன் 48 ரன்களும், கேமரூன் கிரீன் 1 பவுண்டரியுடன் 16 ரன்களிலும், மிட்செல் மார்ஸ் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 51 ரன்களிலும், கேரி 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
இறுதியில் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 83 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டார்க் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களும், கம்மின்ஸ் 1 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சு சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளும், மொயின் அலி மற்றும் மார்க் வுட் தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வென்று தொடரை தக்க வைக்கும் முனைப்பில் விளையாடி வருகிறது. அதுவே, ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: MS Dhoni Bike Collection: தோனியின் பண்ணை வீட்டில் உள்ள பைக்குகள்.. வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?