சென்னை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 16வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷமத்துலா ஷாஹிதி பந்துவீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் இன்னிங்சை டிவென் கான்வாய், வில் யங் ஆகியோர் தொடங்கினர்.
நிதானமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்தது. முஜீப்புர் ரஹ்மான் வீசிய பந்தில் தொடக்க வீரர் டிவென் கான்வாய் 20 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 32 ரன்கள் மட்டும் எடுத்து நடையை கட்டினார்.
இதனிடையே அரை சதம் அடித்து விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் வில் யங் தன் பங்குக்கு 54 ரன்கள் அடித்து கொடுத்து அசமத்துல்லா பந்துவீச்சில் போல்டானார். 110 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி டாப் ஆர்டர் வரிசையை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய டேரி மிட்செல் ஒரு ரன் மட்டும் எடுத்து ரஷித் கான் சுழலில் வெளியேறினார்.
சென்னை மைதானம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். ஆனால் இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சுக்கு பதில் வேகப்பந்து வீச்சுக்கும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் டாம் லாதம் தன் பங்குக்கு 68 ரன்கள் குவித்து அணி 200 ரன்களை கடக்க உறுதுணையாக இருந்தார்.
டாம் லாதம் - கிளென் பிலிப்ஸ் ஜோடி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சிதறவிட்டு துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டது. டாம் லாதம் 68 ரன், கிளென் பிலிப்ஸ் 71 ரன்கள் குவித்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் மார்க் சாப்மன் அதிரடியாக விளையாடி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார். 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 288 ரன்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை நவீன் உல் ஹக், அசமத்துல்லா ஓமர்சாய் தலா 2 விக்கெட்டும், முஜீப் உர் ரஹ்மான், ரசித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆப்கானிஸ்தான் அணியின் இன்னிங்சை ரஹமன்னுல்லா குர்பசும், இப்ராஹிம் சத்ரானும் தொடங்கினர்.
இந்த ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. குர்பஸ் 11 ரன்னும், இப்ராஹிம் சத்ரான் 14 ரன்னும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹசமத்துல்லாவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஹசமத்துல்லா 8 ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து நிலை நின்று ஆடிய ரஹ்மத், ரவிந்திரா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 36 ரன்களில் அவுட்டானார்.
வந்த வேகத்தில் பவுண்டரிகளாக அடித்து இக்ராம் அலிகில் அதிரடி காட்டினார். ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான முகமது நபி 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய ரஷித் கான் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸ் அடித்து 8 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய பவுலர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக ஆப்கானிஸ்தான் அணி 139 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூஸிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. நியூஸிலாந்து அணி சார்பில் சான்ட்னர், பெர்குசன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் படிங்க : கபில் தேவுக்கே டஃப்.. 36 ஆண்டுகால சாதனை முறியடிப்பு! நெதர்லாந்துக்கு அடித்த லாட்டரி!