இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்றுவந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன், மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் மோதியனார்.
பெரும் ஏதிர்பார்புகளுடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் செட் ஆட்டத்தில் இரு வீரர்களும் விட்டுகொடுக்காமல் விளையாடி அசத்தினர். பின்னர் தொடர்ந்து போராடிய லீ ஸி ஜியா 30-29 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டை 22-20 என்ற கணக்கில் ஆக்செல்சன் கைப்பற்ற ஆட்டத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இருப்பினும் மூன்றாவது செட்டில் அபாரமாக விளையாடிய லீ ஸி ஜியா, 21-09 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி ஆக்செல்சனிற்கு அதிர்ச்சியளித்தார்.
மொத்தம் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் லீ ஸ் ஜியா 30-29, 20-22, 21-09 என்ற செட் கணக்கில் விக்டர் ஆக்செல்சனை வீழ்த்தி, ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் தனது முதலாவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
அதேபோல் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானின் நொசோமி ஒகுஹாரா, தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவாங்கை எதிர்த்து விளையாடினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய நொசோமி, 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் போர்ன்பவீ சோச்சுவாங்கை வீழ்த்தி, மகளிர் ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இது அவர் வெல்லும் இரண்டாவது ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டமாகும்.
இதையும் படிங்க: இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது இந்தியா லெஜண்ட்ஸ்!