டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சீன வீராங்கனை பிங் ஜியோவோவை தோற்கடித்து வெண்கலப் பதகத்தை வென்றுள்ளார். 26 வயதான சிந்து இந்த வெற்றியின் மூலம், இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக, மல்யுத்த வீரர் சுஷில்குமார், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். இந்நிலையில், வெண்கலப்பதக்கம் வென்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பி.வி. சிந்து பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், "என்னை ஊக்கப்படுத்தியவர்கள், வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். டோக்கியோ ஒலிம்பிக் ஒரு அனுபவமாக இருந்தது. ஐந்து வருடங்கள் கடினப் பயிற்சியில் இருந்து பதக்கம் பெறும் மேடையில் அடியெடுத்து வைப்பது வரை ஒவ்வொறு தருணமும் மறக்கமுடியாதவை, மனதில் நிற்பவை.
ஒலிம்பிக் பதக்கத்தை பெற்று ஒருநாள் ஆகிவிட்டது. பதக்கத்தை வைத்திருக்கும் மகிழ்வு விவரிக்கமுடியாதது. இந்த வெற்றிக்கான பயணம் என்னுடைய தனிப்பட்ட பயணம் கிடையாது. எனது பயணத்தில் என்னை ஊக்கப்படுத்திய, உடன் நின்ற அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பி.வி. சிந்துவின் ஆறுதலால் கண்ணீர் வந்துவிட்டது - வெள்ளி வென்ற வீராங்கனை உருக்கம்