லக்னோவில் நடைபெற்றுவரும் நடப்பு ஆண்டுக்கான சையத் மோடி பேட்மிண்டன் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்களான சாய் பிரனீத், சமீர் வர்மா, பாருப்பள்ளி காஷ்யப், லக்ஷ்யா சென், கிதாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் பெரிதாகச் சோபிக்கவில்லை என்றாலும், நடப்பு சாம்பியன் சவுரப் வர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அவர், தென் கொரியாவின் ஹியோ குவாங் ஹீ (Heo Kwang Hee) உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சவரப் வர்மா 21-17, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதேபோல் நடைபெற்ற மற்றொரு அரையிறுதிச் சுற்றில், தைவான் வீரர் வாங் சூ வெய் 21-9, 21-7 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சவுரப் வர்மா, வாங் சூ வெய் உடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். நடப்பு சாம்பியன் பட்டத்தை சவுரப் வர்மா தக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.