2020ஆம் ஆண்டுக்கான மலேசியன் மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஆடினார். இவரை எதிர்த்து தைவான் வீராங்கனை ட்யூ யிங் தாய் (tzu ying tai) விளையாடினார்.
பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தைவானை வீராங்கனையை எதிர்த்து பி.வி. சிந்து ஆடியதால் ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது. இதையடுத்து இன்று நடந்த இந்தப் போட்டியில் பி.வி. சிந்து தொடக்கம் முதலே பின்தங்கினார்.
அதிரடியாக ஆடிய தைவான் வீராங்கனை 21-16, 21-16 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தியதையடுத்து அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 36 நிமிடங்களில் முடிவடைந்தது. உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றிய பின், தைவான் வீராங்கனை ட்யூ யிங்கிடம் சிந்து பெறும் 12ஆவது தோல்வியாகும்.
இதையடுத்து நடந்த மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவை எதிர்த்து இந்திய வீராங்கனை சாய்னாவை ஆடினார். அதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கரோலினாவின் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் 21-8, 21-7 என்ற செட்களில் சாய்னா தோல்வியடைந்தார்.
இந்த இருவரின் தோல்வியையடுத்து, இந்திய வீரர்கள் அனைவரும் மலேசியன் மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டென்னிஸ் ராக்கெட்டால் தனது தந்தையை அடித்த வீரர் - காணொலி வைரல்!