சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் ஃபுஷோ நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், ஏற்கனவே இந்திய நட்சத்திரங்களான பி.வி. சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றிலேயே நடையைக் கட்டினர். இந்நிலையில், இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களான பாருப்பள்ளி காஷ்யப், சாய் பிரனீத், பிரனாய், சமீர் வர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில், பாருப்பள்ளி காஷ்யப் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பிரனாய் முதல் சுற்றில், டென்மார்கின் ராஸ்மஸ் ஜெம்கேவிடம் நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சாய் பிரனீத், இந்தோனேஷியாவைச் சேர்ந்த டாமி சுகியார்டோ (Tommy Sugiorto) உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சாய் பிரனீத் 15-21, 21-12, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்துள்ளார். நாளை நடைபெறவுள்ள இரண்டாம் சுற்றுப் போட்டியில், அவர் டென்மார்க் வீரர் ஆண்டெர்ஸ் அன்டோன்செனுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
இதேபோல், நடைபெற்ற மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா, ஹாங் காங்கின் லீ செயூக் யூ வை (Lee Cheyuk Yiu) எதிர்கொண்டார். இதில், கடுமையாக போராடியும் சமீர் வர்மா 18-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.