ஹைதராபாத்: பேட்மிண்டன் வீரர்களுக்கான ஆடவர் ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சாய் பிரனீத் முதல் முறையாக முதல் 10 இடத்தில் இடம்பிடித்துள்ளார்.
உலக பேட்மிண்டன் சம்மேளனம் (பி.டபிள்யூ.எஃப்.) சார்பில் பேட்மிண்டன் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா வீரர் சாய் பிரனீத் கிதாம்பி ஸ்ரீகாந்தை பின்னுக்குத் தள்ளியுள்ளார். சமீபகாலமாக சாய் பிரனீத் ஸ்ரீகாந்தைவிட நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
முன்நோக்கிச் செல்லும் பிரனீத்
இதனால், இப்பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்த அவர், தற்போது ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம், அவர் டாப் 10-க்குள் முதல்முறையாக இடம் பிடித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார் என்பது நினைவுகூரத்தக்க வேண்டிய விஷயமாகும்.
3 இடங்கள் சரிவடைந்த கிதாம்பி
அதேசமயம், 10ஆவது இடத்திலிருந்த கிதாம்பி ஸ்ரீகாந்த் மூன்று இடங்கள் சரிவடைந்து தற்போது 13ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா ஒரு இடம் முன்னேறி 16ஆவது இடத்தில் உள்ளார். மேலும் பாருப்பள்ளி காஷ்யப் தொடர்ந்து 25ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
2ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்ட நஸோமி
மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலையிலிருந்த ஜாப்பான் வீராங்கனை நஸோமி ஒகுஹரா, இந்த சீசனில் ஆறு முறை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளார். இதன் விளைவாக முதலிடத்திலிருந்த அவர் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால், இரண்டாம் இடத்திலிருந்த தைவான் வீராங்கனை தை சூ யிங் (Tai Tzu Ying) முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இப்பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான பி.வி. சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் ஆறாவது இடத்திலும் ஒன்பது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.