2019ஆம் ஆண்டுக்கான சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சாங்ஸௌ (Changzhou) நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் கலந்துகொண்ட சாய் பிரனீத் முதல் சுற்றில், 21-19, 21-23, 21-14 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் அவிங்சனானை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் அவர், சீனாவின் லூ குவான்சூவை எதிர்கொண்டார். இதற்கு முன்னதாக சையத் மோடி இன்டர்நேஷனல் தொடரின் காலிறுதிப் போட்டியில் அவர் 10-21, 21-19, 14-21 என தோல்வி அடைந்திருந்தார். இதனால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாய் பிரனீத் இன்று விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சாய் பிரனீத் 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில், இந்திய வீரர் பருபலி கஷ்யப், இந்தோனேசியாவின் ஜின்டிங் உடன் மோதவுள்ளார். இப்போட்டியில் வெற்றிபெறும் வீரர் காலிறுதிச் சுற்றில் சாய் பிரனீத்துடன் மோத இருக்கிறார் முன்னதாக, இந்தத் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #bwfworldchampionship: வெண்கலம் வென்ற இரண்டாவது இந்தியர் 'சாய் பிரனீத்'