ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரில் ஒற்றையர் பிரிவில் பாருப்பள்ளி காஷ்யப், சமீர் வர்மா, கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முதல் சுற்றிலேயே வெளியேறினர். இதனால் இந்திய ரசிகர்கள் சோகமடைந்தனர்.
இதனிடையே நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்போட்டியில் இந்திய இணை சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோர் உலகின் இரண்டாம் நிலை ஜோடியான இந்தோனேசிய வீரர்கள் முகமது ஹசன், ஹெண்ட்ரா சேதியாவான் ஆகியோரை எதிர்த்து ஆடியது. இப்போட்டியில் முதல் செட்டிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய இணை 21-18 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றியது.
அடுத்த செட்டில் இந்தோனேசிய இணை எழுச்சிக் கண்டதால் இந்திய வீரர்கள் 18-21 என இரண்டாவது செட்டை இழந்தனர். இருப்பினும் மூன்றாவது செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய இந்திய வீரர்கள் 21-13 என்ற கணக்கில் இறுதி செட்டை கைப்பற்றி வெற்றிபெற்றனர். இதன்மூலம் இந்திய இணை காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றது. காலிறுதிப் போட்டியில் இந்திய இணை டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ரூப் ஆண்டர்ஸ் ஸ்காரப் ராஸ்முஸ்ஸென் ஜோடியை சந்திக்கிறது.
இந்த இணை கடந்தாண்டு சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரெஞ்சு ஓபன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா, பி.வி. சிந்து ஆகியோரும் காலிறுதிக்குத் தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் போட்டியில் பி.வி. சிந்து உலகின் முதல் நிலை வீராங்கனையான தாய்வான் நாட்டைச் சேர்ந்த தாய் சூ யிங்கையும், சாய்னா கொரிய வீராங்கனை ஆன் சி யங்கையும் சந்திக்கின்றனர்.