கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் நடைபெறவிருந்த பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தொடங்கவிருந்த ஹைதராபாத் ஓபன் பேட்மிண்டன் தொடரை ரத்துசெய்வதாக சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இத்தொடரை குறிப்பிட்ட தேதியில் முடிப்பது இயலாது. இதனால் ஹைதராபாத் ஓபன் பேட்மிண்டன் தொடரை ரத்துசெய்ய சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது.
அதேபோல், ஆஸ்திரேலியா ஓபன், கொரியா மாஸ்டர்ஸ் உள்ளிட்ட பேட்மிண்டன் தொடர்களும், வீரர்களின் பாதுகாப்பு நலன் கருதி ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இத்தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு, புதிய மாற்று தேதிகளை சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.