சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களைத் தயார் செய்யும் பயிற்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இதனிடையே 2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) ஆடவர் பிரிவில் பயிற்சியாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட சர்வதேச ஒலிம்பிக் வீரர்கள் கமிட்டி, இந்தியாவில் பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டியை மேம்படுத்த உதவியதற்காகவும், சிறந்த வீரர்களை உருவாக்கி அவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெற வைத்ததற்காகவும் கோபிசந்திற்கு இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
கோபிசந்த் கடந்த 2001ஆம் ஆண்டு அனைத்து இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்சிப்பில் பட்டம் வென்றவர் ஆவார். அதன்பின் இந்திய அணியின் பயிற்சியாளராக உருவெடுத்த இவர் சாய்னா நேவால், கிதாம்பி ஸ்ரீகாந்த், பி.வி. சிந்து, சாய் பிரனீத், பருப்பள்ளி காஷ்சியப் போன்று பல்வேறு சிறந்த பேட்மிண்டன் வீரர்களை உருவாக்கியிருக்கிறார்.
பேட்மிண்டன் போட்டியில் கோபிசந்தின் சாதனைகளைக் கௌரவிக்கும் விதமாக அர்ஜுனா விருது (1999), கேல் ரத்னா விருது (2001), பத்ம பூசன் விருது (2004) போன்ற விருதுகளும், சிறந்த பயிற்சியாளருக்கான த்ரோனாச்சார்யா விருதையும் (2009) வழங்கி இந்திய அரசு அவரை கௌரவித்துள்ளது.
இதையும் படிங்க: யு19 உலகக் கோப்பை ஃபைனல்: 177க்கு சுருண்ட இந்தியா