சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் சார்பில் டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் ஓடென்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய நட்சத்திரங்களான பி.வி. சிந்து, சாய்னா நேவால், சாய் பிரனீத், பாருப்பள்ளி காஷ்யப், சவுரப் வர்மா, கிதாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்றுப் போட்டியில், அவர் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 22-20, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறும் இரண்டாம் சுற்றுப் போட்டியில் அவர் ஜப்பானின் அன் சி யங்குடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
முன்னதாக, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சிந்து இந்த சீசனில் 'வேர்ல்டு டூர் பட்டம்' வெல்லவில்லை. சமீபத்தில் நடைபெற்ற சீன, கொரிய ஓபன் தொடரிலும் தொடக்கத்திலேயே வெளியேறினார். இந்நிலையில், தான் டென்மார்க் ஓபன் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
தற்போது இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய அவர், தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.