ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஏப்ரல் 18 முதல் 28 ஆம் தேதி வரை தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்கும் இந்திய ஆடவர்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நட்சத்திர வீரர் சிவ தப்பா, ரோஹித் டோகாஸ் உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆசிய போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் அமிட் பங்கல் இந்த தொடரில் முதல்முறையாக கலந்துக் கொள்ள உள்ளார்.
இந்த தொடரில் பதக்கம் வெல்லும் வீரர்கள், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் நிச்சயம் பங்கேற்பார்கள் என தேசிய குத்துச்சண்டை பயிற்சியாளர் சி ஏ குட்டப்பா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி விவரம்: தீபக் (49) அமிட் பங்கல் ( 52 ), கவிந்தர் சிங் பிஷ்ட் (56), சிவ தப்பா (60), ரோஹித் டோகாஸ் (64), அசிஷ் (69), அசிஷ் குமார் (75), பிரிஜேஷ் யாதவ் (81), நமன் தன்வார்(91), சதீஷ் குமார்(91) ஆகிய எடைப்பிரிவில் கலந்துக் கொள்கின்றனர்.
முன்னதாக, இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம், உலக குத்துச்சண்டை தொடர் மற்றும் ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் முன்னேறுவதற்காக, இந்த தொடரில் தான் பங்கேற்க போவதில்லை என அறிவித்திருந்தார்.