ஹைதராபாத்: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - பாலிவுட் ஹீரோ ஷாகித் கபூர் இணைந்து நடிக்கும் வெப்சீரிஸ் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அதில் நடிப்பதற்காக இவர்கள் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளத்தை உயர்த்திய ஷாகித் கபூர்
கபீர் சிங் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஷாகித் கபூரின் மார்க்கெட் பாலிவுட்டில் கணிசமாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து தனது சம்பளத்தையும் மளமளவென உயர்ந்திய ஷாகித், டிஜிட்டலில் அறிமுகமாவதற்கு ரூ. 40 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம். அத்தோடு அந்த தொடர் பெறும் வரவேற்பைப் பொறுத்து, அதன் அடுத்த சீசனில் நடிப்பதற்கு அணுகினால் சம்பளத்தை மாற்றிகொள்ளும் விதமாக அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்ஸாக களமிறங்கும் விஜய் சேதுபதி
இதுஒருபுறம் இருக்க கோலிவுட்டில் டாப் நடிகராகவும், இதர தென்னிந்திய மொழிப் படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்களில் தோன்றி கலக்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தென்னிந்திய சினிமாக்களில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இதையடுத்து தற்போது அடுத்தகட்டமாக பாலிவுட் திரையுலகை நோக்கிச் சென்றுள்ள அவர், பான் இந்தியா ரசிகர்களுக்காக உருவாகும் வெப் சீரிஸில் மாஸ்ஸாக அறிமுகமாகிறார்.
இதில், அடுத்தடுத்த சீசன்களை கருத்தில் கொண்டு, இந்த வெப் சீரிஸுக்காக ரூ. 55 கோடி சம்பளமாக விஜய் சேதுபதி பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெப் சீரிஸில் நடிக்கும் பாலிவுட் நடிகரான ஷாகித் கபூரை விட அதிக சம்பளத்தை விஜய் சேதுபதி பெற்றிருப்பது பற்றி திரையுலகினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய வேடத்தில் ராஷி கண்ணா
நடிகை ராஷி கண்ணாவும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் கடந்த மாதம் 25ஆம் தேதியே படக்குழுவில் இணைந்துள்ளார்.
பாலிவுட் முன்னணி இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கும் பெயர் வைக்கப்படாத இத்தொடரின் படப்பிடிப்பு கோவாவில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பிரபாஸ் படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்து!