சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் விதமாக அமைந்திருந்த ஃப்ரோசன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ள நிலையில் அதன் தமிழ்ப் பதிப்பில் ஸ்ருதி, டிடி, பிகில் பாடலாசிரியர் விவேக் இணைந்துள்ளனர்.
ஹாலிவுட் பேண்டஸி திரைப்படமான ஃப்ரோசன் 2 நவம்பர் 22ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இதன் தமிழ்ப் பதிப்பில் படத்தின் பிரதான கதாபாத்திரமான எல்சா கேரக்டருக்கு நடிகை ஸ்ருதிஹாசன் டப்பிங் கொடுத்துள்ளார். இது குறித்து கடந்த இரு நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
![Shruthihassan lend her voice for Elsa in Frozen 2](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5046450_frozen-2-shruthihassan.jpg)
இதையடுத்து எல்சாவின் சகோதரி ஆனா கேரக்டருக்கு நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான திவ்யதர்ஷினி டப்பிங் பேசியுள்ளார்.
இதேபோன்று பிகில் பட பாடலாசிரியர் விவேக், படத்தின் தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். மேலும், படத்தின் மிகப் பிரபலமான ஓலஃப் கேரக்டருக்கு காமெடி நடிகர் சத்யன் பின்னணி குரல் தந்துள்ளார்.
![Shruti Haasan along with DhivyaDharshini, Sathyan, Mersal lyricist Vivek joins in Frozen 2 tamil](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5046450_frozen-2-team.jpg)
பிறமொழி டப்பிங் படங்களுக்கு டப்பிங் கலைஞர்களைத் தாண்டி பிரபல நடிகர்களைப் பேசவைக்கும் முறை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான அவெஞ்சர்ஸ் என்ட்கேம் படத்தின் முக்கிய கேரக்டரான ஐயர்ன் மேனுக்கு நடிகர் விஜய் சேதுபதியும் பிளாக் விடோவுக்கு ஆண்ட்ரியாவும் குரல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து தற்போது ஃப்ரோசன் 2 படத்தில் ஸ்ருதிஹாசன், திவ்யதர்ஷினி, சத்யன் என மூன்று நடிகர்கள் இணைந்துள்ளனர்.