கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணத்தினால் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனை நம்பியிருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் நலிவடைந்தது.
இதனால் சமீபத்தில் பல மாநிலங்களும் ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தி பல தொழில்களுக்கு கட்டுப்பாடுகளோடு அனுமதி அளித்தன. அதில் திரைப்பட, தொலைக்காட்சித் தொடர்களும் அடங்கும்.
பல திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஹைதராபாத்தின் ராமோஜி ஃபிலிம் சிட்டியிலேயே நடைபெறும். இந்தச் சூழலில் படப்பிடிப்புக்கு தெலங்கானா அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்புத் தொடங்கியது.
படப்பிடிப்பின்போது எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
- நடிகர், நடிகைகள், பணியாளர்களுக்கு உடல் வெப்ப சோதனை நடத்தப்படுகிறது.
- கிருமிநாசினி, முகக்கவசங்கள் படப்பிடிப்பில் உள்ள அனைத்து நபர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.
- கிருமிநாசினி சுரங்கப்பாதை படப்பிடிப்பு தளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- கேமரா, படப்பிடிப்புக் கருவிகள் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்யப்படுகிறது.
- மேக்கப் ஆர்டிஸ்டுகளுக்கு பிபிஈ உடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் நடிகர்கள் தாங்களே மேக்கப் செய்துகொள்கிறார்கள்.
- இடைவெளி நேரத்தில் தகுந்து இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது.
- நடிகர், நடிகைகள் வீட்டில் இருக்கும் உணவுகளைக் கொண்டுவருகின்றனர்.
- 20 அல்லது 30 நபர்களுடனே படப்பிடிப்பு நடக்கிறது.