நடிகர் மனோஜ் வாஜ்பாய், நடிகைகள் பிரியாமணி, சமந்தா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த தொடர் 'தி ஃபேமிலி மேன் 2'. அமேசான் ப்ரைமில் 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடரின் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை இரட்டை இயக்குநர்கள் ராஜ் - டி.கே ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இந்தத் தொடரில் ராஜி என்னும் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். இதன் மூலம் அவர் வெப் சீரிஸில் அறிமுகமாகிறார். 'தி ஃபேமிலி மேன் 2' தொடர் அமேசான் ப்ரைமில் ஜூன் 4ஆம் தேதி வெளியானது. தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாகச் சித்தரித்து ட்ரெய்லர் வெளியானதில் இருந்து தமிழ்நாட்டில் இந்தத் தொடரை தடை செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சியினர் குரல் எழுப்பிய வண்ணம் உள்ளனர். இயக்குநர் சேரனும் இந்தத் தொடரை தான் புறக்கணிப்பதாகத் தனது சமூகவலைதளத்தில் கூறியுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தற்போது இந்தத் தொடரில் ஈழத்தமிழராக ராஜி கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா தனது கதாபாத்திரம் தொடர்பான விவரங்களை இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். அதில்," 'தி ஃபேமிலி மேன் 2' இணையத் தொடருக்கான விமர்சனங்களை படிக்கும்போது என் மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது. இந்தத் தொடருக்காக இயக்குநர்கள் என்னை அணுகிய போது, அக்கதாபாத்திரத்தை உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையோடு வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஈழப் போரில் பெண்கள் குறித்த கதைகள் உள்பட தமிழர் போராட்டத்தின் ஆவணப் படங்களை படக்குழுவினர் எனக்குக் காண்பித்தார்கள்.
அவற்றைப் பார்த்தபோது நீண்ட காலமாக சொல்லமுடியாத துக்கத்தையும் இன்னல்களையும் எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் நிலையை எண்ணி அதிர்ச்சியடைந்தேன். ஈழத்தமிழர்கள் குறித்தான ஆவணப்படங்களை சில ஆயிரம் பேருதான் இணையத்தில் பார்த்திருக்கிறார்கள் என்பதை கவனித்தேன். பல்லாயிரக்கணக்கான ஈழ மக்கள் தங்கள் வாழ்க்கையை இழந்தபோது உலகம் எப்படி விலகி நின்று பார்த்தது என்பது அப்போதுதான் தெளிவாகப் புரிந்தது.
லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் இழந்துள்ளர்கள். எண்ணற்ற மக்கள் போரினால் உண்டான காயங்களை மனதில் சுமந்துகொண்டு வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். ராஜி கதாபாத்திரம் புனைவு என்றாலும் சமமற்ற போரினால் உயிரிழந்தவர்களுக்கும் போரினால் உண்டான ஆறாத வடுக்களைச் சுமந்து கொண்டு வாழ்பவர்களுக்குமான சமர்ப்பணம்.
ராஜி கதாபாத்திரம் உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையோடும் நுட்பமாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தேன். ராஜியின் கதை ரத்தமும் சதையுமாக நமக்கு உணர்த்தும் உண்மை முன் எப்போதையும்விட இப்போது நமக்குத் தேவைப்படுகிறது. மனிதர்கள் ஒற்றுமையுடன் வெறுப்பு, அடக்குமுறை, பேராசை ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டும் என்று விரும்பினேன். இதை நாம் செய்யத் தவறினால் எண்ணற்ற மக்களின் அடையாளம் விடுதலை, சுய நிர்ணய உரிமை போன்றவை மறுக்கப்படும்" என்றார்.