70களின் க்ளாசிக் நடிகர் ராபர்ட் டீநிரோ, பிரபல நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ, ஹாலிவுட் கனவுக்கன்னி ஸ்கார்லெட் ஜோஹன்ஸன், லுபிடா ந்யோஙோ, சார்லிஸ் தெரோன் ஆகியோரின் வரவால் இந்த க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் வழங்கும் விழா ஜொலிஜொலித்தது.
இதில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான விருதுகளை ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படம் வென்றுள்ளது. மேலும் சிறந்தத் துணை நடிகருக்கான விருதினை இத்திரைப்படத்திற்காக பிரபல நடிகர் ப்ராட் பிட் வென்றுள்ளார்.
சென்ற வருடம் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ஜோக்கர் திரைப்படத்திற்காக நடிகர் வகின் ஃபீனிக்ஸ்(Joaquin Phoenix) சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். கோல்டன் க்ளோபைப் போலவே ஜூடி திரைப்படத்திற்காக ரெனி ஜெல்வெஜெர் (Renee Zellweger) சிறந்த நடிகைக்கான விருதினை வென்றுள்ளார்.
நெட்ஃப்ளிக்ஸின் பெரும் பாராட்டுகளை அள்ளிவரும் ’மேரேஜ் ஸ்டோரி’ திரைப்படத்திற்காக லாரா டெர்ன் (Laura Dern) சிறந்த துணை நடிகைக்கான விருதினை வென்றுள்ளார். மார்ட்டின் ஸ்கார்ஸஸியின் தி ஐரிஷ் மேன் திரைப்படம் ஒட்டுமொத்த குழுவின் சிறந்த நடிப்பிற்கான விருதினை (Best Acting Ensemble) பெற்றுள்ளது.
சிறந்த இயக்குநருக்கான விருதினை பாராசைட் (Parasite) திரைப்படத்தை இயக்கிய போங் ஜூன் ஹோவும், 1917 படத்தை இயக்கிய சேம் மெண்டிஸும் வென்றுள்ளனர்.
டாய் ஸ்டோரி 4 திரைப்படம் சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதினை வென்றுள்ளது. சூப்பர் ஹீரோக்களின் சங்கமமான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் சிறந்த அறிவியல் அல்லது ஹாரர் கதை மற்றும் சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் பிரிவுகளில் வென்றுள்ளது.
சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதினை 1917 திரைப்படத்திற்காக ரோஜர் டேகின்ஸ் (Roger Deakins) வென்றுள்ளார்.
தொலைக்காட்சியைப் பொருத்தவரை HBO வின் சக்ஸஷன், வாட்ச் மேன் தொடர்களுக்காக நடிகைகள் ரெஜினா கிங்கும், ஜீன் ஸ்மார்ட்டும் வென்றுள்ளனர். ஃப்ளீபேக் தொடருக்காக நடிகை ஃபீபி வாலர் - ப்ரிட்ஜ் நகைச்சுவைத் தொடருக்கான சிறந்த நடிகை விருதினை வென்றுள்ளார்.
சிறந்த குறுந்தொடருக்கான விருதினை புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான ப்ரேக்கிங் பேட் (Breaking Bad)இன் அடுத்த பாகமாக வெளிவந்த எல் கமினோ: எ ப்ரேக்கிங் பேட் மூவி (El Camino: A Breaking Bad Movie), வென் தே சீ அஸ் (When They See Us) ஆகிய தொடர்கள் மற்றும் சிறந்த அனிமேஷன் தொடருக்கான பிரிவில் போஜேக் ஹார்ஸ்மேன் (BoJack Horseman) தொடர் என பெருவாரியான நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள் விருதுகளை அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளை அள்ளிய ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’, ஃப்ளீபேக்!