தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பவன்கல்யாண். இவரை தெலுங்கு ரசிகர்கள் 'பவர் ஸ்டார்' என்று அழைக்கின்றனர். சினிமாவில் இருந்து சில காலம் விலகிய பவன்கல்யாண் தனிக்கட்சி தொடங்கி ஆந்திர தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார். 'பிங்க்' தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் வழக்குரைஞராக நடித்து வருகிறார். இவரை அவ்வப்போது சமூக வலைதள பக்கம் வாயிலாக சீண்டி வந்த இயக்குநர் ராம்கோபால் வர்மா சமீபத்தில் ‘பவர் ஸ்டார்’ எனும் படத்தை தயாரித்து இயக்கி அதன் ட்ரெய்லரை வெளியிட்டு இருந்தார்.
இது பவர் ஸ்டார் ரசிகர்களை கோபத்துக்கு உள்ளாக்கியது. இந்தப் படத்தை ராம்கோபால் வர்மா இணையத்தில் வெளியிட உள்ளார். இதற்கிடையில் நேற்று இரவு (ஜூலை 24) பவர்ஸ்டார் படத்தின் ட்ரெய்லரை பார்த்து ஆத்திரமடைந்த பவன்கல்யாண் ரசிகர்கள் ராம்கோபால் வர்மாவின் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள்.
இதுகுறித்து ராம்கோபால் வர்மா, காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 6 பேரை கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து ராம் கோபால் வர்மா கூறுகையில், "இது ஒரு ஜனநாயக நாடு, எனக்கு ஒரு படம் தயாரிக்க உரிமை உண்டு. இது ஒரு கற்பனையான படம், யாருடனும் தொடர்புடையது அல்ல என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
ஆனால் இதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. இந்தப் படத்தை இணையத்தில் வெளியிடுவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
ராம் கோபால் வர்மா பவர் ஸ்டார் படம் குறித்து முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், என்னுடைய பவர் ஸ்டார் படம் யாருடைய வாழ்க்கை வரலாறு அல்ல. ஆனால் அது தேர்தலில் தோல்வியை சந்தித்த ஒரு நடிகரின் பிந்திய நாள்களை பற்றிய ஒரு கற்பனை கதை. அது உயிருடன் உள்ள யாரேனும் பற்றியது போல் இருந்தால் அது முழுக்க முழுக்க தற்செயலானது.
பவர் ஸ்டார் படம் பவன் கல்யாணை பற்றியது என்று ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை, மட்டுமல்ல ஒரு பொறுப்பற்றவையும் கூட எனப் பதிவிட்டு இருந்தார்.