தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தந்தை ஜெயராஜ், மகன் ஃபென்னிக்ஸ் இருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். பின்னர் காவல் துறையினர் தாக்கியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.
இதுகுறித்து இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "காவல்துறை என்றாலே அடித்து சித்ரவதை செய்வதுதான் என்ற எண்ணத்தை உருவாக்கும் சாத்தான்குளம் போலீஸ் அலுவலர்கள் போன்றோரின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்போலீஸ் அலுவலர்கள் கண்டிப்பு குரல் எழுப்ப வேண்டும். இங்கே இறந்த இருவருக்கான நீதி என்பதை தாண்டி இனியொருவர் இதுபோல உயிரிழக்கக்கூடாது.
அதன் உதாரணமாக இந்தப் புகாரை நீதிபதிகள் விசாரித்து கொடுக்கும் கடும்தண்டனை மூலமாக நீதியும், சட்டமும் காப்பாற்றப்படவேண்டும். காவல்துறை மக்களை பாதுகாக்க அன்றி உயிரை பறிக்க அல்ல என்பதை முதலில் இதுபோன்ற காவலர்களுக்கு பதிவு செய்யவேண்டும். இல்லையேல் மக்கள் காவல்துறையை நம்ப மறுப்பார்கள்.
மனித உரிமைக்கழகமும் மக்களும் இந்த அவமானச் செயலுக்கு தகுந்த பாடம் புகட்ட தங்கள் எதிர்ப்புக்குரலை உயர்த்தவேண்டும். நீதியின் தீர்ப்பு சம்பந்தப்பட்ட காவலர்களின் தவறை நிரூபிக்கும் பட்சத்தில், அரசு அவர்களுக்கான கடுமையான தண்டனையை நிறைவேற்றி மக்களுக்கான அரசு என நம்பிக்கை தரவேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:’நீதிமன்றக் காவலில் தந்தை, மகன் உயிரிழந்தது மிகப்பெரிய மனித உரிமை மீறல்’ - கனிமொழி