வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'ஆடை'. ரம்யா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் அமலா பாலிற்கு நண்பர்களாக நடித்துள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் தைரியமான, துறுதுறுவென, நினைத்ததை முடித்தே தீர வேண்டும் பெண்ணாக அசத்தியிருக்கிறார் அமலா பால்.
படத்தில் அமலா பாலாவின் பெயர் சுதந்திர கொடி என்னும் காமினி. நிறுவனத்தில் இவரும் இவருடைய நண்பர்கள் கூட்டமும் ஒரு நாள் இரவு அங்கேயே தங்குவதற்கு திட்டமிடுகின்றனர். அன்றைய தினம் காமினியின் பிறந்தநாள்.
அலுவலகத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று அனைவரும் மது அருந்துகிறார்கள். போதையில் ஒரு இரவு ஆடையின்றி இருக்கிறேன் என்று பெட் கட்டுகிறார் காமினி. அதனைத் தொடர்ந்து, போதையில் இருக்கும் காமினியின் ஆடையை கழற்றி தனியாக விட்டுச் செல்கிறார் அடையாளம் தெரியாத நபர் ஒருவர். அவர் ஏன் அப்படி செய்தார், எதற்காக செய்தார்? காமினி ஆடை இல்லாமல் இருப்பதை அறிந்து இரண்டு பேர் அலுவலகத்திற்குள் வருகின்றனர். அவர்கள் யார், அவர்களிடமிருந்து காமினி எப்படி தப்பிக்கிறார் எதற்காக இந்தச் சிக்கலில் சிக்கினார் என்பதுதான் மீதிக்கதை...
படத்தில் முதல் பாதி தைரியமான, இரு சக்கர வாகனத்தில் டாப் கியரில் பறக்கும் எதற்கெடுத்தாலும் பெட் கட்டும் பெண்ணாக நடித்திருப்பவர், இரண்டாம் பாதியில் ஆடை இல்லாமல் நடப்பதற்கே கூச்சப்படுபவராகவும் நடித்திருக்கிறார்.
இரண்டு வெவ்வேறு தோற்றத்திலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார் காமினி. 'மைனா' படத்திற்கு அடுத்ததாக இவரது கெரியரில் மிக முக்கியமான படமாக 'ஆடை' இருக்கும். படத்தில் ஆடையின் முக்கியத்துவம் மட்டுமல்லாமல், அரசியல், பெண்ணியம், நீட், மீடூ, ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்று அனைத்தையும் ஒரு கை பார்த்திருக்கிறார் ரத்ன குமார்.
அடல்ட் என்னும் போர்வையில் குப்பைகளை கொட்டாமல் அதில் எங்கு, எப்படி சமூக கருத்துகளை சொல்லலாம் என சிந்தித்த ரத்ன குமாருக்கு ஒரு பெரிய கை தட்டல். படத்தில் முதல் பாதியில் மாடர்ன், பெண்ணியம் என பேசிவிட்டு இரண்டாம் பாதியில் கலாசாரம், பண்பாடு, பெண்ணின் மானம் என்று சற்று வித்தியாசம் காட்டியுள்ளார் ரத்ன குமார்.
படம் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுவென செல்கிறது. அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படம். பிரதீப் குமாரின் இசை படத்திற்கு பெரிய பலம் என்றே கூறலாம்.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கூடுதல் பலம். ஆடை, பெண்ணியம் பேசினாலும் நம் சுதந்திரம் எதுவரை என்பதில் சுயக்கட்டுப்பாடு வேண்டும் என்னும் வாழ்வின் யதார்த்தத்தை ஆணித்தரமாக காட்டியுள்ளார். படக்குழுவினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!