நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும்போது என்னென்ன வாக்குறுதிகளை அளித்தோமோ அவை அனைத்தையுமே நிறைவேற்றி வருகிறோம் எனத் தெரிவித்தார். நடிகர் சங்க கட்டடப் பணி இன்னும் ஆறு மாத காலத்தில் முடிவுபெறவுள்ளதாக கூறிய அவர், கட்டடம் முழுமையாக நிறைவுபெற வேண்டும் எனவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.
நடிகர் சங்க கட்டடம் மூலமாக கிடைக்கப்பெறும் தொகையை நலிந்த கலைஞர்களுக்கு உதவித்தொகையாகவும், அவர்களது குழந்தைகளின் படிப்பு செலவிற்கு உதவித்தொகையாகவும் கொடுக்க பயன்படும் என்றார்.
நடைபெறவுள்ள நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்த, விஷால், பொதுச்சொத்தை காப்பாற்றுவதற்குத்தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார்.
தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் நேரில் சந்திக்கவுள்ளோம் என கூறிய அவர், விரைவில் கட்டடப் பணிகள் நிறைவுபெறும் என உறுதியளித்தார். அது தொடர்பாகவும் பேசவுள்ளோம் என்றார்.