மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, கர்நாடக திரைப்பட வர்த்தகசபை சார்பில் இன்று (நவ.16) நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை (Basavaraj Bommai), அரசியல் கட்சியினர், திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் புனித் ராஜ்குமாரை கெளரவிக்கும் விதமாக கர்நாடக ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஷால், "புனித் மறைவு செய்தி கேட்டு என்னால் நம்ப முடியவில்லை. புனித் ராஜ்குமார் 1800 குழந்தைகளின் கல்விக்குக் காரணமாக இருந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு அந்த 1800 குழந்தைகளின் கல்விக்கும் நான்தான் பொறுப்பு.
தைரியம் இல்லை
புனித்தின் முகம் என் கண்களுக்கு முன்னால் இன்றும் தெரிகிறது. இரண்டு நாள்களானது அவர் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ள. அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள எனக்கு தைரியம் இல்லை. நான் அந்தக் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்கிறேன் என கூறியது விளம்பரத்திற்காக, பணத்திற்காக அல்ல. உண்மையைச் சொன்னால், என் பெயரில் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. அம்மா, அப்பா வீட்டில் தான் இருக்கிறேன்.
புனித் ராஜ்குமாரை மறக்க முடியாது
நான் ஒரு வீடு வாங்கியிருக்க வேண்டும், ஆனால் அது முக்கியமில்லை. அடுத்த வருடம் கூட வீடு வாங்கலாம். அந்தப் பணத்தை நான் குழந்தை கல்விக்காக செலவு செய்கிறேன்.
புனித் பெயர் எத்தனை வருடங்கள் ஆனாலும் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். யாரிடமும் சொல்லாமல் எத்தனையோ பேருக்கு அவர் உதவி செய்திருக்கிறார். புனித் போன்ற மனிதரை யாராலும் எளிதில் மறக்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Karnataka Ratna Puneeth Rajkumar; மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு!