நடிகர் விமலின் மனைவி மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இந்நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த திருநாவுக்கரசர் என்பவர் நடிகர் விமல் பண மோசடியில் ஈடுபட்டதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், " 'மன்னர் வகையறா' படப்பிடிப்புக்கு தஞ்சாவூர் வந்த விமல் தன்னிடம் நட்பாக பழகி 50 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி தன்னை ஏமாற்றியுள்ளார்" என கூறியுள்ளார். இந்நிலையில் திருநாவுக்கரசர் புகாருக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் விமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "சமூக வலைதளங்களிலும் நாளிதழ்களிலும் என்னை பற்றிய தவறான செய்திகள் வந்துள்ளதை நான் படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.
திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணப் பரிமாற்றமோ இல்லை. அவர் மீது இது தொடர்பாக மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும். மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளரிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.