சென்னை: விக்ரம் நடிக்கும் 60வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
7 கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். படத்தில் முதல் முறையாக விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவுள்ளனர்.
நடுத்தர வயது நபர் கையில் துப்பாக்கியுடன் டிரிக்கரில் ஆள்காட்டி விரலை வைத்திருக்க, இளம் வயது நபரின் கை துப்பாக்கியின் மறுமுனையை பிடித்திருப்போது தெறிக்கவிடும் போஸ்டருடன் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சீயான் 60 என்ற தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஆக்ஷன் கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். 2021ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வரும் நடிகர் விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமை' ஆதித்ய வர்மா' படம் மூலம் கதாநாயகனாக்கினார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜூன் ரெட்டி' ரீமேக்காக உருவாகியிருந்த இந்தப் படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.
இதையடுத்து துருவ் விக்ரமுக்கு கோலிவுட்டில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்த நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக விக்ரமின் 60வது படத்தில், துருவ் விக்ரமும் கதாநாயகனாக இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலிவுட் சினிமாவில் தந்தை-மகன் ஒரே படத்தில் நடிப்பது புதிதல்ல என்றாலும், இரு நடிகர்களும் ஹீரோக்களாகவே வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது ஒரே படத்தில் பிரதான கேரக்டரில் நடிப்பது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட் சினிமாவை வேற லெவலுக்கு எடுத்த சென்ற இயக்குநர் என்று புகழ் பெற்ற கார்த்திக் சுப்பராஜ் படத்தை இயக்கவிருப்பதால், படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.