நடிகர் விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயக்குநர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, விஜய் சேதுபதி கூறியதாவது, “இளையராஜாவை மிகவும் மதிக்கிறேன். அதே அளவிற்கு இந்த படத்தில் இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவை பிடிக்கும். இந்த படத்தில் கதாநாயகியை கடல் கடந்து தூக்கிச் சென்றுவிடுகின்றனர். அவரை மீட்டெடுப்பதே கதை. யார் என்ன என்கிற விவரம் கூறினால் சுவராஸ்யம் இருக்காது. இப்படத்தில் கதாநாயகனுக்கு காது சற்று மந்தமாகவே கேட்கும். கதாநாயகி சத்தமாக பேசுவார். அந்த கதாபாத்திரத்தில் அஞ்சலி சிறப்பாக நடித்துள்ளார்” என்று கூறினார்.
மேலும், தொடர்ந்து அவர் பேசுகையில், நடிகர் சங்கத் தேர்தலில் இரு அணிகளாக போட்டியிடுபவர்களில் ஒரு அணி மட்டும் என்னிடம் வந்து பேசினார்கள். அவர்கள் கருத்தும் மற்ற நடிகர்கள் கருத்தும் ஒத்துப்போனால் கண்டிப்பாக அவர்களுக்கு தான் ஓட்டு போடுவேன் என்றும் தெரிவித்தார்.
ஆனால் எந்த அணி என்று இப்போது கூற விரும்பவில்லை என்றும், சினிமாவை நம்பி நிறைய தொழிலாளர்கள் உள்ளார்கள் அதனால் நல்லபடியாக தேர்தல் நடந்து முடியவேண்டும் என்றும் கூறினார்.