கரோனா தொற்று காரணமாக மக்கள் வீட்டில் முடங்கி ஐந்து மாதங்களாகியுள்ள நிலையில் சென்னையில் சாமானியர் ஒருவரின் நிலை எப்படி தலைகீழாக மாறியுள்ளது என்பதை நடிகர் விஜய்சேதுபதியின் ஃபோட்டோ சூட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் புகைப்படக் கலைஞர் ராமச்சந்திரன்.
கரோனா தொற்றுக்கு முற்றுபுள்ளி வைக்க மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம் என்றால், தொற்று ஏற்படாதவாறு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மனதளவில் பாதித்தவர்கள் மற்றொருபுறம் இயல்பு வாழ்க்கையை நினைத்து ஏக்கத்துடன் உள்ளனர்.
நாள்தொறும் பரபரப்பாக இயங்கிவந்தவர்கள் எல்லாம், தற்போது செய்வதறியாது வீட்டில் முடங்கிபோயுள்ளனர். கரோனா ஒருவரை எப்படியெல்லாம் ஆட்டிப்படைத்ததுள்ளது என்பதை விஜய்சேதுபதியின் ஃபோட்டோசூட் புகைப்படங்களை பார்த்தால் தெரியும்.
ராமச்சந்திரன் கரோனாவால் முடங்கிபோன சென்னையை தன் கேமரா மூலம் பதிவுசெய்ய நினைத்தபோது, தமிழ் திரையுலகில் எதார்த்த நடிகர் என பெயரெடுத்த விஜய்சேதுபதி நினைவுக்கு வந்துள்ளார். இதையடுத்து அவர் விஜய்சேதுபதியை தொடர்புகொண்டு அவரை புகைப்படம் எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலில் சற்று தயங்கிய விஜய் சேதுபதி இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு போட்டோ சூட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இது குறித்து விஜய்சேதுபதி கூறுகையில், "இந்த ஊரடங்கால் வீடு சிறையாகும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தாலும் வீடு சிறைபோன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டது. திரைப்படங்களில் நாயகனாக பொலிவுடன் வலம் வந்து, ஆடிப்பாடி நடித்துவந்தேன்.
தற்போது இந்த ஐந்து மாத ஊரடங்கால், முகத்தில் நீண்ட தாடியுடனும், அங்குமிங்கும் நரைத்த முடியுடனும் இருப்பது கரோனாவின் வீரியத்தை உங்களுக்கு புரியவைத்துவிடும். புகைப்படக் கலைஞர் ராமச்சந்திரனின் இந்த ஒரு புகைப்படமே ஒட்டுமொத்த கரோனா எனும் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் சாமானியனின் நிலை என்பதற்கு சான்று" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... பாழடைந்த பங்களாவில் போட்டோஷூட் - அக்ஷய் குமாரின் 32 வருட பிளாஷ்பேக்!