சென்னை: தமிழ் திரைப்பட உலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். தற்போது தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடவுள்ளதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சமீப காலமாக நடிகர் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வலியுறுத்தி வருகின்றனர். அப்படி ஒட்டப்படும் போஸ்டர்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படத்தை போட்டு அவர்களுடன் விஜய்யை ஒப்பிட்டு வாசகங்கள் எழுதப்படுகின்றன.
இத்தகைய போஸ்டர்களால் தேவையற்ற அரசியல் விவாதங்கள் ஏற்படுவதுடன், பல்வேறு தரப்பினரிடையே மோதலும் ஏற்படுகிறது. இந்நிலையில், ரசிகர்களின் இந்த செயலுக்கு அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
![விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13178247_kk.jpg)
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சமீப காலமாக, இயக்க தோழர்கள் ஒரு சிலர் ஆர்வக்கோளாறால் விஜய்யை பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை விஜய் படங்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தை உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.
ரசிகர்கள், இயக்க தோழர்களின் இச்செயல்களை அவ்வப்போது விஜய்யின் அனுமதியின் பேரில் கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது. இருப்பினும் இப்படி தொடர்வது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற செயல்களை விஜய் என்றும் விரும்புவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
![விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13178247_sds.png)
எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், விஜய்யின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தளபதி அவர்களின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : வாலை சுருட்டு... இன்று மாலை ருத்ர தாண்டவம் லிரிக் வீடியோ