‘சாதிதான் காதலுக்கு எதிரி என்றால், காதல்தான் சாதிக்கு எதிரி’ என ஒரு சொலவடை உண்டு, இளைஞர்கள் மத்தியில் விஜயின் காதல் திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
விஜய்யின் திரைப்பயணத்தை மாற்றி அமைத்த படம் ‘பூவே உனக்காக’. காதலிக்கும் பெண் கிடைக்காமல் போனால் திராவகம் வீசுவது, கொலை செய்வது என பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துவரும் வேளையில், அடிடா அவள, வெட்றா அவள என்றில்லாமல் காதலியின் கல்யாணத்தில் போய் ‘நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன்’-னு பாடிவிட்டு வருவார் விஜய். ‘பூவே உனக்காக’ திரைப்படத்தில் தான் நேசிக்கும் பெண் வேறொருவரை நேசிப்பது தெரிந்ததும், காதலி மீது வெறுப்புக் கொள்ளாமல், அந்தக் காதலை இவரே சேர்த்து வைப்பார். விஜயின் காதல் படங்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருந்தது.
விஜயின் திரைப்பயணத்தில் ‘காதலுக்கு மரியாதை’ மற்றுமொரு முக்கியமான திரைப்படம். இந்து குடும்பத்தில் பிறந்த ஆணும், கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த பெண்ணும் காதலிக்கிறார்கள், இவர்களின் காதல் கைகூடுகிறதா இல்லையா என்பதுதான் கதை. ஆனால் இந்தத் திரைப்படம் அவ்வளவு முக்கியத்துவம் பெறக் காரணம். விஜய்யின் கதாபாத்திரம் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டும் என விருப்பப்படுவதாய் அமைந்திருக்கும். பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து எடுக்கப்பட்டதால் இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு சமூகத்தில் ஒரு நல்லவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
இயக்குநர் பா. இரஞ்சித் ஒரு பேட்டியில், ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ படங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பலரும் தைரியமாக காதலிக்க ஆரம்பித்தார்கள், தன் காதலிக்கு ‘மினி’ என பட்டப்பெயர் வைத்துக்கொள்ளுவது ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் ஏற்பட்டது என கூறியிருப்பார்.
’நிலாவே வா’ திரைப்படமும் இப்படியான கதைக்களம்தான், மதவெறியால் ஊரில் கலவரம் ஏற்பட்டுவிடக் கூடாதென நேசிக்கும் பெண்ணை பிரிந்து செல்வார். விஜயின் காதல் திரைப்படங்களில் வரும் வசனங்கள் எல்லாமே சாதி, மத வெறியர்களுக்கு உறுத்தலாக அமைந்திருக்கும். ‘நிலாவே வா’ படத்தில் ரகுவரன், ‘அவனுக்கு இவளப் பிடிச்சுருக்கு, இவளுக்கு அவனப் பிடிச்சுருக்கு, இரண்டு பேருக்கும் மனசு பிடிச்சுருக்கு, உங்களுக்கு ஏயா மதம் பிடிச்சுருக்கு, கொஞ்சாமாவது அறிவா சிந்திங்கனு ஒரு வசனம் பேசியிருப்பார். இதில் ரகுவரன் பேசியதை குறிப்பிடக் காரணம், காதல் திரைப்படங்களில் விஜய் ரொம்ப அட்ஜஸ்ட் செய்து நடித்தார். நானே வசனம் பேச வேண்டும், சமூகத்துக்கு அறிவுரை கூறும் இடத்தில் கதாநாயகனான நான்தான் இருக்க வேண்டும் என விஜய் ஆர்டர் போடாமல் காதல் படங்களின் கதைக்கருவுக்கு ஏற்ப நடித்துகொடுத்தார்.
காதல் தோல்வியுற்றாலோ, காதலில் பிரிவு ஏற்பட்டாலோ எதிர்பாலினத்திடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கொள்ளக் கூடாது என்பதை இவரது பெரும்பான்மையான காதல் படங்கள் பறைசாற்றின.
’கண்ணுக்குள் நிலவு’ படத்தில் சைக்கோவா நடித்திருப்பார், அதில் ஒரு காட்சி
இந்த புருவத்துல, இந்தக் கண்ணுல, இந்த நெஞ்சுல, இந்த விரல் நுனியில் தெய்வீக ஒளி நெறைஞ்சிருக்கிறத என்னால உணர முடியுது. ஆனால் இந்த தேவதையால கூட என்னக் காப்பாத்த முடியாது என விஜய் பேசியிருப்பார். காதலியிடம் சரணடைதல் பற்றி இந்தக் காட்சி அவ்வளவு அழகாக விவரிக்கும். சைக்கோ கதாபாத்திரமாக நடித்தாலும் அதிலும் விஜயின் காதல் மென்மையானதாக இருக்கும்.
இப்படி காதல், காதல்... என ஒரு காலகட்டத்தில் காதலுக்காக திரையில் வாழ்ந்திருப்பார் விஜய். தற்போது ஆக்ஷன் பாதையை தேர்ந்தெடுத்து நடித்துவந்தாலும், அதிலும் விஜயின் காதல் காட்சிகள் அவ்வளவு அழகாக அமைக்கப்பட்டிருக்கும். அதில் விஜயின் நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கத்தான் செய்கிறார்கள்.