கேரளாவின் முதுபெரும் நாடகக் கலைஞரும், நடிகரும், பாடகருமான பப்புக்குட்டி பாகவதர் தனது 107ஆவது வயதில் கொச்சியில் கடந்த திங்கள்கிழமையன்று காலமானார்.
இவர் இதுவரை 25க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், கொச்சியில் பல்லூருவில் தனது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக பப்புக்குட்டி பாகவதர் காலமானார்.
கேரள சைகல் என்று அறியப்பட்ட இவர், இயக்குநர் ஷாஃபி இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான 'மேரிக்குன்டொரு குஞ்சாரு' என்னும் திரைப்படத்தில் என்டடுக்கே வன்னடுக்கும் என்ற பாடலை பாடியப்பின்னர் பிரபலமானார்.
1940ஆம் ஆண்டு வெளியான 'ஜிந்தகி' என்னும் படத்தில் இடம்பெற்ற சோஜா ராஜகுமாரி சோஜா என்று கே. எல். சைகல் என்பவர் பாடிய பாடலை பப்புக்குட்டி பாகவதர் பாடியப் பின்னரே அவருக்கு கேரள சைகல் என்ற பெயர் அடையாளமானது.
முதுபெரும் நடிகர் பப்புக்குட்டி பாகவதரின் மறைவுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், "பப்புக்குட்டி பாகவதர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்துவைத்தார். அதற்குப் பின்னர் 70 ஆண்டுகளாக நாடகத்துறையில் சினிமாத்துறையிலும் பப்புக்குட்டி பாகவதர் பெயர் பெற்றார். அவரது பங்களிப்புகள் கலாச்சார கேரளாவால் என்றும் நினைவில் வைத்திருக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
1913ஆம் ஆண்டு கேரளாவின் எர்ணாகுளத்தில் பிறந்த பப்புக்குட்டி, தனது ஏழு வயதில் தேவமணி என்னும் இசை நாடகத்தில் அறிமுகமானார்.
பின்னர், சங்கநாசேரி என்னும் இடத்தில் இருக்கும் நாடகக் குழுக்களில் முக்கிய அங்கம் வகித்தார். நாடகக் கலைஞராக 10,000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.
மேலும், 1960களில் பிரபலமான குருவாயூரப்பன், படிச்ச கள்ளன் போன்ற மலையாளத் திரைப்படங்களிலும் பப்புகுட்டி பாகவதர் நடித்துள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க...'A1 குற்றவாளி மீதான குற்றத்தைக்கூட நிரூபிக்க முடியவில்லை'