புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ், நிழன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வா பகண்டையா'. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ஜெயகுமார் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
இந்த படத்தை இவர் இயக்கியது மட்டுமின்றி, தனது 'ஒளி ரெவிலேஷன்' நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "வா பகண்டையா என்பது ஒரு கிராமத்தின் பெயர். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அந்த கிராமம் தான் கதைக்களம் என்பதால் படத்தின் தலைப்பாக அந்த பெயரையே வைத்துவிட்டேன்.
சமூகத்தில் நடக்கும் அவலங்களைத் தான் இப்படம் பேசுகிறது. காதல், காமெடி, நகைச்சுவை என அனைத்து ஜனரஞ்சகமான அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது" என்று இயக்குநர் பா.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவரிடம் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "வன்கொடுமை தடுப்பு சட்டம் வேண்டாம், என்று சொல்லும் கருத்தை நான் ஏற்க மாட்டேன். அதேசமயம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் சில அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது.
அதனால், அந்த சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட அந்த சட்டத்தைக் கொண்டு, உயர் சாதி என்று சொல்லக்கூடிய சில அப்பாவிகளை, பலர் பழிவாங்குவது, மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. அதைத் தடுக்க வேண்டும் என்று என் படம் வலியுறுத்தியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிரஞ்சீவி என்னைத் தேர்தலில் இருந்து விலகச் சென்னார் - நடிகர் விஷ்ணு மஞ்சு