தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த எம்ஜிஆர், இப்போதும் சினிமா ரசிகர்களின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் என்பதற்கு நிகழ்கால உதாரணமாகத் திகழ்கிறது சேலம் மாவட்டம்.
ஆம்... சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் செயல்பட்டு வரும் சந்திரா திரையரங்கத்தில், எம்ஜிஆர் திரைப்படங்கள் திரையிடப்பட்டுவருகிறது.
கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் திரையரங்குகள் மூடியிருந்த நிலையில், சென்ற மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டன. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் படங்கள் குறைவாக வெளியாகுவதால், மீண்டும் எம்ஜிஆர் படங்கள் திரையிட்டதாகத் திரையரங்கு உரிமையாளர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் கடந்த வாரம் சந்திரா திரையரங்கத்தில் வெளியான படம், ' உலகம் சுற்றும் வாலிபன்'.
இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் கூறுகையில், "1973ஆம் ஆண்டு பெரும் பொருட்செலவில் எம்ஜிஆர் தயாரிப்பு இயக்கத்தில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன், சந்திரா திரையரங்கில் மீண்டும் கடந்த வாரம் திரையிடப்பட்டது.
கூட்டமே வராது என்று எதிர்பார்த்த நிலையில், தினமும் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து உலகம் சுற்றும் வாலிபனை 2 காட்சிகளிலும் கண்டு மகிழ்ந்தனர்.
டிவி, ஸ்மார்ட் போன், இன்டர்நெட் என்று சினிமா பார்க்கும் தளங்கள் உருவாகி உள்ள காலகட்டத்தில் மீண்டும் திரையரங்கங்கள் உயிர் பெற்றுள்ளது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
உலகம் சுற்றும் வாலிபன் வெளியாகி 48 ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கழித்து இப்போதும் எம்ஜிஆர் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாகவே வலம் வருகிறார்.
ரசிகர்கள் எம்ஜிஆரைத் திரையில் பார்த்தால் இப்போதும் விசில் கைத்தட்டலைப் பறக்கவிடுகின்றனர். அவர் திரையில் சிரித்தால் ரசிகர்களும் சிரிக்கிறார்கள். அவர் அழுதால் ரசிகர்களும் அழுகிறார்கள். சினிமாவில் மட்டுமல்ல அவர் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் தான் இருக்கிறார் என்றால் அது மிகையில்லை.