நடிகர் சின்னக் கலைவாணர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார். இவரது இழப்பு அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு இடங்களில் அஞ்சலி, இரங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக எஸ்ஆர்பிஎஸ் ஸ்டூடியோஸ், சிகரம் குரூப் சார்பில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை வடபழனியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் பொன்ராம், நடிகர்கள் தாமு, லொள்ளு சபா ஜீவா, கொட்டாச்சி, கூல் சுரேஷ், கவிஞர் சிநேகன், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் தாமு, நல்ல சிந்தனைகளை மக்களிடம் சேர்த்த பெருமை விவேக் அவரையே சேரும். அப்துல் கலாமின் ஆணைக்கிணங்க மரம் நடும் பணியை செய்தவர் விவேக். இனி அவரது நண்பர்கள் மூலமாக செய்வார். விவேக் உயிருடன் உள்ளார் என்பதற்கு இந்நிகழ்ச்சி சாட்சி.
மரக்கன்று ஒரு ஆக்ஸிஜன் தொழிற்சாலை. இது மரமாக வேண்டும், இதனை மரமாக்க பாதுகாக்க வேண்டும். இதற்காக நட்டமரம் பாதுகாப்பு விழா நடத்தினோம். தமிழ்நாடு முழுவதும் இந்த விழா நடத்தப்பட்டது. விதைப்பந்து திட்டத்தில் நிறைய ஆலோசனை விவேக் எங்களுக்கு அளித்தார் என்றார்.
தொடர்ந்து நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், விவேக்கின் ஒவ்வொரு சொல்லும் மரக்கன்று தான். மனதிற்குள் ஏதோ ஒன்றை வளர்த்துக்கொண்டே இருக்கும் என்றார்.
நடிகர் ஆரியன் பேசும்போது விவேக்குடன் பணியாற்றும்போது நேர்மறை எண்ணங்கள் மட்டுமே வளரும். அவரது கனவை நாம் எல்லோரும் நிறைவேற்றுவோம். அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்கிறேன் என்றார்.
நடிகர் லொல்ளுசபா ஜீவா பேசுகையில், மனிதநேய மிக்க மனிதர். அனைவருடனும் அன்பாக பழகியவர். அதனால் தான் அவரது மறைவுக்கு தன்குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் மக்கள் வருந்தினர். வாழ்ந்த காலத்தில் முன்னுதாரணமாக வாழ்ந்தவர். அவரது லட்சியமான ஒருகோடி மரம் நடும் ஆசையை நிறைவேற்றுவோம் என்றார்.
கவிஞர் சிநேகன் பேசும்போது, விவேக் மறையவில்லை நமக்குள் இருக்கிறார். மரங்களை செடிகளை பார்க்கும்போதெல்லாம் இருக்கிறார் அவர் என்றார்.
முன்னதாக சிறப்பு அழைப்பாளர்கள் விவேக்கின் திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். விழாவின் இறுதியில் அனைவருக்கும் விவேக் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: விவேக் நினைவாக மரக்கன்று நட்ட நடிகை ஆத்மிகா!