தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் 4 மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:
கரோனா லாக்டவுன் தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன. திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையாக இருக்கிறது.
இதன் மூலம் 1,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு திரையரங்கத்துக்கும் 25 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் தயாரிப்புகள் இல்லாமல் சினிமா சார்பான இழப்பு என்றால் 3 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று கூறுகிறார்கள். திரையரங்குகளை எப்போது திறப்பார்கள் என்று அரசு தரப்பில் இருந்து பதில் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது விமானங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்துவிட்டன. விமானத்தில் நெருக்கமாக அமர்ந்துதான் பயணம் செய்கிறார்கள்.
அப்போது வராத கரோனா திரையரங்குகளில் மட்டும் எப்படி வரும்? திரையரங்கத்தில் ஏதாவது மாற்றம் செய்யச் சொன்னால், நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம். அதற்கான பதிலையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
இதைத்தொடர்ந்து ஒடிடி-இல் திரைப்படம் வெளியாவது பற்றி கேட்டபோது கூறியதாவது:
மக்கள் திரையரங்கம் சென்று படம் பார்க்கத்தான் விரும்புவார்கள். அதுதான் அவர்களுக்குத் திருப்தி அளிக்கும். திரையரங்கத்தில் படம் பார்க்கும்போது வரும் திருப்தி வேறு எந்த தளத்திலும் கிடைக்காது. வேறு வழியில்லாமல் இப்போது ஓடிடியில் பார்க்கலாம். ஆனால் அதுவே ஒரு நிரந்தரமான தீர்வு அல்ல.
திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால், இரண்டாவது முறை வேண்டுமானாலும் ஓடிடியில் பார்க்கலாம். ஓடிடியில் தமிழில் வெளியிடப்பட்ட இரண்டு படங்களும் தோல்வி அடைந்துள்ளன. நெட்ப்ளிக்ஸில் வெளியான படங்களும் படுதோல்வி அடைந்துள்ளன. தமிழில் மட்டுமல்ல, இந்தியில் இப்படி வெளியான படங்களும் படுதோல்வி அடைந்து இருக்கின்றன. எனவே திரையரங்கங்கள்தான் சினிமாவுக்கான ஒரே தளம் என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் ஓடிடியை ஆதரிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.
திரையரங்கம் கிடைக்காத சிறு படங்களுக்கு ஓடிடி ஒரு வாய்ப்பாக இருக்குமா என்ற கேள்வியை முன்வைத்தபோது, சிறு படங்களுக்குத் திரையரங்கங்கள் கிடைப்பதில்லை என்று சொல்வது தவறான கருத்து. பல நாள்களாக இந்தப் பொய்யைச் சொல்லி வருகிறார்கள். இது மிகவும் தவறானது. கடந்த ஆண்டு வெளியான படங்களில் 200 படங்கள் சிறு படங்கள்தான்.
தமிழ்நாட்டில் 1,070 திரையரங்குகள்தான் உள்ளன. 2019இல் மட்டும் 240 தமிழ்ப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. நேரடித் தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாமல், தெலுங்குப் படங்கள், நேரடி ஆங்கிலப் படங்கள், ஆங்கில டப்பிங் படங்கள், மலையாளம், இந்திப் படங்கள் என்று வெளியாகி உள்ளன. இப்படியிருக்கும்போது திரையரங்கம் கிடைக்கவில்லை என்பது பொருத்தமில்லாத வாதம்தானே. இந்தப் பிரச்னைக்கு தீர்வாக திரையரங்குகளை அதிகரிக்க வேண்டும்.
பெரிய திரையரங்குகளை இரண்டாகவோ மூன்றாகவோ மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள்விடுத்து சில ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம். ஓடிடியில் வெளியிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்து படங்களை வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஓடிடியில் அவர்கள் படம் வெளியிட முடிவு எடுத்தபோது, எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் அவ்வாறு செய்யும்போது, நாங்கள் அதிலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்றுதான் கூறினோம். அப்போது அவர்களுக்கு நாங்கள் திரையரங்குகள் கொடுக்க மாட்டோம் என்று சொல்லவில்லை. சிவகுமார் குடும்பத்துப் படங்களை அந்த தளத்திலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும். இதுதான் எங்கள் நிலை. இவ்வாறு ஆர். பன்னீர் செல்வம் கூறினார்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கில் 'ஜாங்கிரி' மதுமிதா கற்றுக்கொண்ட வித்தைகள்!