சென்னை: டி.எம். ஜெயமுருகன் இயக்கத்தில், மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தீ இவன்'. இந்த படத்தின் மூலம் நவரச நாயகன் கார்த்திக் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, , சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் டி.எம். ஜெயமுருகன் கூறுகையில், ”இன்றைய நவீன காலத்தில் நம் கிராமத்துப் பண்பாடும், நாகரீகமும், உறவுகளும் மறைந்து வருகிறது. அதனை இந்த தலைமுறைக்குத் தரும் படமாக, ‘தீ இவன்’ உருவாகியுள்ளது. அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல நிறையப் படங்கள் வந்திருந்தபோதும் இதில் ரத்தமும், சதையுமான அந்த உறவைச் சொல்கிறோம்.
உயிரை விட மானம் பெரிது என்பது தான் தமிழர்களின் உச்சபட்ச நாகரீகம். அதை உணர்த்தும் படமாக இது இருக்கும். படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். இன்றைக்கு நடிக்க வரும் இளம் நடிகர்களே இந்த காட்சிகளை நடிக்கத் தயங்குவார்கள். அப்படியான காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார் கார்த்திக். அந்த சண்டைக் காட்சிகள் படத்தில் பிரமாண்டமாக இருக்கும்.
அது மட்டுமல்லாது ஹம்மர் என்ற விலையுயர்ந்த கார் ஒன்றை வைத்துப் பாடல் காட்சி ஒன்றை, ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளோம். அதுவும் பிரமாண்டமாக வந்திருக்கிறது. இந்த படம் வெளியான பிறகு நடிகர் கார்த்திக் மீண்டும் பல படங்களில் நாயகனாக நிச்சயம் நடிப்பார்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திட்டமிட்ட தேதிக்கு முன்பே வெளியாகிறதா ’எம்ஜிஆர் மகன்’?