தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்திற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பெரும்பாலும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத இவரை வெளியே ரசிகர்கள் பார்த்தால், உடனே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
அதேபோல் கடந்த மே மாதம் கரோனா ஊரடங்கின் போது நடிகர் அஜித், அவரது மனைவியுடன் சிகிச்சைக்காக தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது மருத்துவரின் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்த பர்சானா (26) என்ற பெண் அஜித்துடன் செல்பி எடுத்துள்ளார். அப்போது பாதுகாப்பு அலுவலர்கள் பர்சானாவின் செல்போனை பறித்துக் கொண்டு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பக்கூடாது என அவரை எச்சரித்து செல்போனை வழங்கினர்.
இருப்பினும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் கசிந்தது. அதை பார்த்த சிலர் அஜித்திற்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என செய்தி பரப்பினர். இதனால் பர்சானாவை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த அஜித்தின் மனைவி ஷாலினி, மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசியதால் மீண்டும் பர்சனாவை பணிக்குச் சேர்த்தனர். ஆனால், பர்சானாவிற்கு வேலை வழங்காமல் மீண்டும் பணியிலிருந்து நிறுத்தினர். மேலும் லோன் காரணங்களைக் காட்டி பர்சனாவின் சான்றிதழ்கள் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வந்துள்ளது.
கரோனா ஊரடங்கில் போதிய வருமானமின்றி குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவைச் சந்தித்து, நடிகர் அஜித்திடம் மன்னிப்பு கேட்டு, பணி கிடைக்க உதவுமாறு கேட்கப் போவதாக பர்சானா கூறினார்.
ஆனால் அஜித்தை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியாது என சுரேஷ் சந்திரா மறுத்ததால், மனமுடைந்த பர்சனா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பர்சானா புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'வலிமை' படத்திற்கு திடீர் சிக்கல்!