அமேசான் ப்ரைமில் 2019ஆம்ஆண்டு ஒளிபரப்பான 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தத் தொடரில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் - பிரியாமணி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேசியப் புலனாய்வு அமைப்பில் ரகசியமாகப் பணிபுரியும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனைப் பற்றிய ஆக்ஷன் கலந்த குடும்பக் கதையாக அமைந்திருந்த இந்தத் தொடர், 10 பகுதிகளாக ஒளிபரப்பாகியது.
இந்தியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டாலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. தற்போது இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது சீசனில் சமந்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் சமந்தா வெப் சீரிஸில் அறிமுகமாகிறார். முதல் சீசனை இயக்கிய இயக்குநர்கள் ராஜ் நிடிமோரு - கிருஷ்ணா டி.கே ஆகியோரே இரண்டாவது சீசனையும் இயக்கியுள்ளனர். இந்தத் தொடர் அமேசான் ப்ரைமில் ஜூன் 4ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியான இந்தத் தொடரின் ட்ரெய்லர் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகள் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் இது குறித்து முன்னதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் தொடரை தடை செய்யவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தி ஃபேமிலிமேன் 2 தொடரை அமேசான் ப்ரைமில் ஒளிப்பரப்ப மத்திய அரசு தடை செய்ய வேண்டும்” எனக் கோரி அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.