‘வைகைப்புயல்’ என தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் வடிவேலு, ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல நல்ல குணச்சித்திர நடிகரும்கூட. 1992ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’ படத்தில் எசக்கி என்னும் கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருப்பார். முதலாளி மீதுள்ள விசுவாசத்தால் சண்டைக்குச் சென்று ஒரு கையை இழந்தபடி நடித்திருப்பார். தற்போது மீண்டும் அந்த எசக்கி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
![Thalaivan irukkindran](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4892619_2.jpg)
கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில்தான் எசக்கி கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறாராம். லைகா நிறுவனம் தயாரிக்கவிருந்த 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்திலிருந்து வடிவேலு விலகியதையடுத்து, அப்படத்துக்காக வடிவேலு வாங்கிய முன்பணத்திற்குப் பதிலாக லைகா தயாரிக்கும் ’தலைவன் இருக்கிறான்’ படத்தில் வடிவேலு நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கமல்ஹாசன் அரசியலில் களம்கண்ட பின் உருவாகும் படம் என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிங்க: ஊர் திருவிழாவில் மக்களை மகிழ்வித்த வடிவேலு!