கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. நவம்பர் 10ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடித்து திரையரங்குகளைத் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து திரையரங்கத்தின் ஊழியர்கள் திரையரங்குகளைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஏறத்தாழ ஏழு மாதங்களுக்கும் மேலாக திரைப்படங்கள் வெளிவராத நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிய திரைப்படங்கள் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விபிஎஃப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்ட முடியாது எனத் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் - தயாரிப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்றது. இந்த பேச்சுவார்த்தை தற்போது தேல்வியடைந்துள்ளது.
இதனால் இந்தத் தீபாவளிக்கு திரையரங்கில் புதியப்படங்கள் வெளியாகாது எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாரதிராஜா தலைமையிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது விபிஎஃப் சம்பந்தமாக அனைத்து தரப்புகளின் நிலைப்பாட்டின் காரணமாக புது திரைப்படங்கள் வெளியீட்டில் சிக்கல் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ்நாடு அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும் சமீபத்தில் மதிப்பிற்குரிய அமைச்சர் கடம்பூர் ராஜூம் திரையரங்கு உரிமையாளர்களும் கேட்டுக்குகொண்டதற்கிணங்க. இந்தக் காலகட்டத்தை கருத்தில் கொண்டு ஒரு வருட காலத்திற்கு தற்காலிக தீர்வு ஒன்றை எங்கள் நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கி முன் வைத்தோம். எனினும் பல கட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தியும் சுமூகமான தீர்வு எட்டப்படாததால் மீண்டும் தயாரிப்பாளர்களோடு கலந்தாலோசித்து நல்ல தீர்வு ஏற்படும் வரை புது படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்ட்டுள்ளது.